kidney_2

சிறுநீரக தான மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை 3 நாள் காவலில் வைக்க மேற்கு வங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்களின் மூலம் சிறுநீரக தான மோசடியில் ஈடுபட்டதாக, டெல்லியிலுள்ள பிரபல அப்போலோ  மருத்துவமனை மருத்துவரின் இரு செயலர்கள், இடைத்தரகர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறுநீரகம் தானம் பெறுவோருக்கும், சிறுநீரக தானம் அளிப்போருக்கும் இடையே இடைத்தரகர்கள் போன்று இவர்கள் செயல்பட்டு வந்தது  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் பிடிபட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், மேற்குவங்கத்தில் பதுங்கியிருந்த சிறுநீரக மோசடி கும்பல் தலைவர் ராஜூகுமார் ராவை டெல்லி  காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
அவரை பராஷத் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, ராஜூராவ் குமாரை 3 நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவரை டெல்லி கொண்டு வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சிறுநீரக மோசடியில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.