அகமதாபாத்: நர்மதா அணை தொடர்பான போராட்டத்தில் பல்லாண்டுகளாக ஈடுபட்டுவரும் மேதாபட்கர், ஒரு தனிமனிதனின் கர்வம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைவிடப் பெரியது என்று பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை அவரது சொந்த மாநிலமான குஜராத்தில்ஆரவரமாக கொண்டாடிய நிலையில், நர்மதா நதியின் குறுக்கேயுள்ள சர்தார் சரோவர் அணை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் நூற்றுக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் மோடியின் பிறந்தநாளை நரகவேதனை தினமாக குறிப்பிட்டனர். நர்மதா பச்சோவா அந்தோலன் செயல்பாட்டாளர்களால் வழிநடத்தப்பட்ட இந்தப் பேரணி மதியம் தொடங்கி, மாலைவரை நீடித்தது.

மத்தியப் பிரதேசத்தின் பல வாழிடங்கள் அணை நீரில் மூழ்கியதை சோகத்துடன் நினைவுகூறும் விதமாக பல போராட்டக்காரர்கள் தங்களின் தலைகளை மழித்திருந்தார்கள்.

நர்மதா அணையின் நீர்த்தேக்க அளவை, மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, 139 மீட்டர் உயரத்திற்கு குஜராத் அரசு உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பல பகுதிகள் கூடுதலாக நீரில் மூழ்கின.

இதனால்தான் மேதா பட்கர் அந்த விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இவர் பல்லாண்டு காலம் அந்தப் பிரச்சினைக்காக போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.