நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்தியாவை ‘அதிபர் ஆட்சி’ முறைக்கு மாற்றும் முயற்சி என்றும் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலை ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில் தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசின் இந்த முயற்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற முழக்கம் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும், ஜனநாயகத்தை அழித்துவிடும்.
இந்த திட்டம் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை பலவீனப்படுத்தவும், மத்திய அரசுக்கு முழு அதிகாரம் செல்வதற்கும் வழிவகுக்கும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவை ‘அதிபர் ஆட்சி’ முறைக்கு மாற்ற சங்பரிவார் முயற்சி செய்வதாக பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கும் சங்பரிவாரின் முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.