நெல்லை: ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாளையொட்டி தமிழகஅரசு சார்பாக அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்துமரியாதை செய்தனர். ஒண்டிவீரனினுக்கு 2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.
வெள்ளையர்களை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவராக இருந்த சுந்தரலிங்கம் இறுதியில் தன்னையே மாய்த்துக் கொண்ட வரலாறு ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்பே நெல்லை சீமையின் நெற்கட்டும் செவல் பாளையத்தின் மாவீரனாக இருந்த பூலித்தேவன் வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டார். வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் மாமன்னர் பூலித்தேவனுக்கு முதன்மை படைத்தலைவராக இருந்தவர் மாவீரன் ஒண்டி வீரன். இவரின் வீரத்தை போற்றும் வகையில் பாளையங் கோட்டையில் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் 2016 மார்ச் இல் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
அதன்படி இந்தாண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்தது, அதிகாரிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதுகுறித்துடிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீரம் செறிந்த விடுதலைப் பக்கங்களில் விண்ணுயரப் புகழடைந்த பூலித்தேவரின் படைத்தளபதி ஒண்டிவீரனின் 251-ஆவது நினைவுநாள்! 2011-இல் அவரது நினைவு மண்டபத்துக்கு கால்கோளிட்டது கலைஞர் ஆட்சி! ஆங்கிலேய வல்லாதிக்கத்துக்கு எதிராக விடுதலைக் கனலை மூட்டி, ஆதிக்கம் தகர்த்த அவரது புகழ் போற்றுவோம்! என புகழாரம் சூட்டி உள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தையொட்டி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்த சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் 251-ஆவது நினைவு தினத்தையொட்டி இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவீரன் ஒண்டிவீரன் நினைவுநாளையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று நாம் சுதந்திரக் காற்றை அனுபவிக்கிறோம் என்றால் அதற்கு மூலக் காரணமாக விளங்கியவர்களில் ஒருவர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்கள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளையொட்டி அவருக்கு எனது அஞ்சலியையும், வீர வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, பாளையங்கோட்டையில் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் மணிமண்டபத்தை மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2016 ஆம் ஆண்டு திறந்து வைத்ததை இந்தத் தருணத்தில் நினைவுகூருகிறேன். இந்தப் பூமி உள்ளவரை மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என தெரிவித்துள்ளார்.