நாக்பூர்
போலிஸ் கான்ஸ்டேபிள் ஆக நினைத்த கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் தற்போது ரிசர்வ் வங்கியில் அதிகாரி ஆகி உள்ளார்.
சில வருடங்கள் முன்பு உமேஷ் யாதவின் தந்தை திலக் யாதவ் தன் மகன் ஒரு அரசுப்பணியில் அமர வேண்டும் என ஆசைப்பட்டார். தந்தையின் ஆசைப்படி போலிஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கு தயார் செய்தார் உமேஷ். ஆனால் ஒரு மயிரிழை வித்தியாசத்தில் அவர் தேர்வாகவில்லை.
தற்போது அவர் தந்தையின் ஆசைப்படி அரசுப் பணி, அதுவும் ரிசர்வ் வங்கியின் அதிகாரியாக பணி ஏற்றுள்ளார் உமேஷ் யாதவ். கடந்த மே மாதம் இங்கிலாந்து பயணத்துக்கு முன் ரிசர்வ் வங்கியின் நேர்காணலை முடித்து விட்டுச் சென்றார். தற்போது ரிசர்வ் வங்கியின் நாக்பூர் கிளையில் உதவி மேனேஜராக பணி ஏற்றுக் கொண்டபின் இலங்கை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு முன் உமேஷ் ஏர் இந்தியாவில் பணி புரிந்து வந்தார். ஆனால் அவர் பணி நிரந்தரம் ஆக்கப்படவில்லை. அதன் பிறகு அவர் ஒரு நல்ல நிறுவனத்தில் பணி கிடைத்தால் மட்டுமே சேர வேண்டும் என்னும் எண்ணத்தில் இருந்தார். அவருக்கு பொருளாதார ரீதியாக எந்த ஒரு தேவையும் இல்லை. ஐபிஎல் மூலமாக அவருக்கு நல்ல தொகை கிடைத்து வருவது தெரிந்ததே.