பீஜிங்
மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி நேற்று 63 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று முதலில் சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கியது. தற்போது அது உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது. உலகெங்கும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சம் ஆகி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது
சீனாவில் கடந்த 2 நாட்களாக ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவித்தன. இதனால் சீனாவில் கொரோனா முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக மக்கள் மகிழ்ந்தனர். நேற்று இந்த மகிழ்ச்சியைப் பாழாக்கும் படி புதிய செய்தி வந்துள்ளது. சீனாவில் பல பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
சீன சுகாதார ஆணையம், ”சீனாவில் நேற்று 63 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 61 பேர் வெளிநாட்டினர் ஆவார்கள். சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் எண்ணிக்கை 1104 ஆகி உள்ளது. இதுவரை சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,865 ஆகவும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 3,335 ஆகவும் உள்ளது” எனத் அறிவித்துள்ளது.