கொரோனா தொற்று நோய்க்கு பதஞ்சலி தயாரித்துள்ள கோரோனில் என்ற மருந்து சிறந்த தீர்வாக இருக்கும் என்று பதஞ்சலி வர்த்தக நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் விளம்பரப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பிப்ரவரி 19 ம் தேதி, பாபா ராம்தேவ் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் அந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த மருந்தை அனைவருக்கும் மீண்டும் அறிமுகப்படுத்தினர்.
முறையான மருத்துவம் படித்த மருத்துவரான மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தனின் இந்த செயலுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதஞ்சலி தயாரித்த மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா ? அப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், எத்தனை பேருக்கு ஆய்வு செய்யப்பட்டது ? ஆய்வின் முடிவு என்ன ? ஆய்வு குறித்து எந்த நிறுவனம் இவர்களுக்கு சான்று வழங்கியது ?
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு பொருளை, மருந்து என்று கூறி போலியாக உலவ விடும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது ஏன் என்றும், நாட்டு மக்கள் அனைவரும் இந்த மருந்தை பற்றி தெரிந்துகொள்ளும் வண்ணம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தார்மீக அடிப்படையில் நாட்டு மக்களுக்கு தாமாக முன்வந்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த கோரோனில் மருந்து கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் என்றால், எதற்காக 35000 கோடி ரூபாய் செலவில் தடுப்பு மருந்துக்கு செலவு செய்தீர்கள் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த மருந்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அங்கீகாரம் பெற்றது என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கூறி வருவதை உலக சுகாதார அமைப்பு, எங்களிடம் இந்த நிறுவனம் சார்பில் எந்த ஒரு விண்ணப்பமும் இதற்காக வரவில்லை என்று ராம்தேவின் புருடாவுக்கு ஏற்கனவே திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அமைச்சரின் இந்த செயல் இந்திய மருத்துவ கூட்டமைப்பை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.