பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக “சேர்ப்பது” பற்றி பேச்சு ஆபத்தானது மட்டுமன்றி சட்டவிரோதமானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒவ்வொரு இந்தியருக்கும் நிரந்தர வீடு உள்ள எந்த மாநிலத்திலும் வாழவும் வேலை செய்யவும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

“பீகாரின் தற்போதைய வாக்காளர் பட்டியலில் பெயர்கள் உள்ள பல லட்சம் பேர், அவர்கள் மாநிலத்திலிருந்து “நிரந்தரமாக இடம்பெயர்ந்தனர்” என்று முத்திரை குத்தி அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் எவ்வாறு வந்தது?”
“ஒரு நபர் ஒரு மாநிலத்திலிருந்து “நிரந்தரமாக இடம்பெயர்ந்தார்” என்ற முடிவுக்கு வருவதற்கு முன், ஒவ்வொரு வழக்கிலும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டாமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “30 நாட்களில் 37 லட்சம் பேர் சம்பந்தப்பட்ட அத்தகைய விசாரணை எவ்வாறு நடத்தப்பட்டிருக்க முடியும்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்” என்று அழைப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவமதிப்பதாகும்.
“சத் பூஜை விழாவின் போது வழக்கமாக பீகாருக்குச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநில சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க தங்கள் சொந்த ஊருக்கு வர அனுமதியில்லையா ?” என்றும் கேட்டுள்ளார்.
“வாக்காளராகப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பீகாரில் (அல்லது வேறு மாநிலத்தில்) அத்தகைய வீடு உள்ளது.
தமிழ்நாட்டில் அவர்களை எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?
தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது.
இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.