டெல்லி: தேச துரோக சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை (மே 5ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு சம்பந்தமாக பதில் அளிக்க மத்தியஅரசு அவகாசம் கோரி உள்ளது.
தேச துரோக சட்டத்தை, 1837ல் பிரிட்டிஷ் அரசியல்வாதியும், வரலாற்று ஆசிரியருமான தாமஸ் மெக்காலே உருவாக்கினார். 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது, இந்தச் சட்டம் முதலில் அதில் சேர்க்கப்படவில்லை. பின், 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா இயற்றப்பட்டு இந்திய தண்டனைச் சட்டத்தில், இது இணைக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தில் 124 ஏ பிரிவுதான் தேச துரோகத்தை வரையறுக்கிறது.
புது இந்திய தண்டனைச் சட்டத்தில் 124ஏ பிரிவு தேச துரோகத்தை வரையறுக்கிறது. அதன்படி, அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும் விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேச துரோகமாகக் கருதப்படுகின்றன. இந்த சட்டத்தின்படி, தேச துரோக வழக்கு பதியப்பட்டால் ஜாமினில் வர முடியாது. குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் மூன்று ஆண்டுகள் குறைந்தபட்ச தண்டனையாகவும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனையும் கிடைக்கலாம். சில நேரங்களில் அபராதமும் விதிக்கப்படும். அரசுப் பணிகளில் சேர முடியாது. பாஸ்போர்ட்டை நிரந்தரமாகவோ அல்லது தேவைப்படும் போதோ, நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த வழக்கின் விசாரணையின்போது, உச்சநீதிமன்றமும், ‘பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச துரோக சட்டம், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுக்குப் பின்னும் தொடரவேண்டுமா’ என, கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பாக, எடிட்டர்ஸ் கில்டு எனப்படும் பத்திரிகை ஆசிரியர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இது தொடர்பாக ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும், வரும் மே 5ம் தேதி முதல் வழக்கின் இறுதி விசாரணை தொடங்கும் எனவும் கடந்த ஏப்ரல் 27ம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. வரைவு பிரமாண பத்திரம் தயாராகி விட்டதாகவும், அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது.