டெல்லி: 18வது மக்களவைக்கான தேர்தலில் அதிக அளவில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்றி சாதனை செய்துள்ளது. வாக்குப்பதிவில் வரலாறு காணாத அளவில், இதுவரை எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் 64 கோடி மக்கள் வாக்களித்து உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளதாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இது அனைத்து G7 நாடுகளின் 1.5 மடங்கு வாக்காளர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் 2.5 மடங்கு வாக்காளர்கள் என்றும் கூறினார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4ந்தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைநகர் டெல்லியில், செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, தேர்தல் ஆணையர், செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறை.
கடந்த மார்ச் மாதம் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கும் கடந்த ஏப். 19-இல் தோ்தல் தொடங்கி ஜூன் 1ஆம் தேதியுடன் நாட்டின் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் நடந்த வன்முறைகளைத் தவிர வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்தி முடிக்கப்பட்டது. ஜூன் 4ம் தேதி செவ்வாயன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
சமீப நாட்களில், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அணையத்தில் பல்வேறு புகார்கள் தெரிவித்து மாற்றி மாறி மனு அளித்த நிலையில், அதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில், தேர்தல் ஆணையர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்துள்ளனர் என்று அறிவித்ததுடன், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பங்கேற்று, தேர்தல் திருவிழாவை வெற்றிகரமானதாக மாற்றியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையர்கள் எழுந்து நின்று கைதட்டி தங்களது பாராட்டுகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் குமார், நடந்து முடிநத் மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்துள்ளனர். தேர்தல் தொடர்பாக முதன்முறையாக 100 சுற்றறிக்கையை தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ளோம். மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். 85 வயதுக்கு மேற்பட்டோரும் மாற்றுத்திறனாளிகளும் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
தேர்தல் பணிகளுக்கு 5 லட்சம் வாகனங்கள பயன்படுத்தப்பட்டன. தேர்தல் மற்றும் பாதுகாப்புப்அதிகாரிகள் என ஒன்றரை கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலுக்காக 135 சிறப்பு ரயில்கள் விடப்பட்டன.
நாட்டில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 27 ஐரோப்பிய நாடுகளின் வாக்காளர்களை விட 2.5 மடங்கு அதிகம். பெண்கள், முதியவர்கள் என அனைவரும் பங்கேற்று, தேர்தல் திருவிழாவை வெற்றிகரமானதாக மாற்றியிருக்கிறார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இந்த முறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. நக்சல் ஆதிக்கம் நிறைந்த இடங்களிலும் அதிக வாக்குகள் பதிவானது. “தேர்தல் பணியாளர்களின் உன்னிப்பான பணியின் காரணமாக, குறைவான மறுவாக்கெடுப்புகளை உறுதி செய்துள்ளோம் – 2019ல் 540க்கு எதிராக 2024 மக்களவைத் தேர்தலில் 39 மறுவாக்குப்பதிவுகளையும், 39ல் 25 மறுதேர்தல்கள் 2 மாநிலங்களிலும் நடந்துள்ளன என்றார்.
வன்முறையைக் காணாத பொதுத் தேர்தல்களில் இதுவும் ஒன்று. இதற்கு இரண்டு வருடங்கள் தயாராக வேண்டியிருந்தது” என்று கூறிய ராஜீவ் குமார், “தேர்தல் ஆணையம் இந்த தேர்தலின் போது கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இது 2019-ல் கைப்பற்றப்பட்ட மதிப்பை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம்… உள்ளூர் அணிகள் தங்கள் வேலையைச் செய்ய அதிகாரம் பெற்றன” என்றும் கூறினார்.
இந்தியாவில், நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் மக்களவைத் தேர்தல் உலக சாதனை என்று என்று கூறிய ராஜீவ் குமார். பாரபட்சமின்றி, தலைவர்களின் ஹெலிகாப்டர்கள், வாகனங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்பட்டன. சுமார் நான்கரை லட்சம் புகார்கள் வந்த நிலையில் 98 சதவீத புகார்கள் முடித்துவைக்கப்பட்டன என்றும் கூறினார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை செயல்முறை குறித்த விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவிக்கையில், “ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையும் மிகவும் வலுவாக உள்ளது. இது ஒரு கடிகாரத்தின் துல்லியத்தைப் போலவே செயல்படுகிறது” என்கிறார்.