சண்டிகர்:
டிராக்டர் பேரணியின் போது குஷன் சீட் பொருத்தி பயணித்த ராகுலை பா.ஜ., விமர்சித்திருந்தது. அதற்கு பதிலளித்த ராகுல், ‘பிரதமரின் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பல சொகுசு படுக்கைகள் உள்ளன’ என, பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் மண்டி முறை பெரியளவில் செயல்படுவதால், இம்மசோதா மண்டி முறையை ஒழித்துவிடுமோ என்ற அச்சத்தில் அம்மாநிலத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் தலைமையில் பஞ்சாபில் தொடங்கிய டிராக்டர் பேரணி அரியானா மாநிலத்திற்கு இன்று வந்தது. அவரை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, ‘எங்களை தடுத்துள்ளார்கள். 2 மணி நேரம் அல்ல, 24 மணி நேரம் அல்ல, 500 மணி நேரம் ஆனாலும் இந்த இடத்தை விட்டு அகல மாட்டேன். அவர்கள் வழிவிட்டால் அமைதியான முறையில் பேரணியை வழி நடத்துவேன். இல்லை என்றால் அமைதியான முறையில் இங்கேயே காத்திருப்பேன்’ என, ராகுல் தெரிவித்தார். அதன்பின், நூறு பேர் மற்றும் 3 டிராக்டர்களை மட்டும் அரியானா அரசு அனுமதித்தது.
இந்நிலையில், டிராக்டர் பேரணியின் போது குஷன் சீட் பொருத்தி ராகுல் பயணித்ததை பா.ஜ., விமர்சித்தது. அரியானாவின் சிர்சா பகுதியை அடைந்த ராகுல் இதற்கு பதிலளித்து பேசுகையில், ‘பிரதமர் மோடி தனது நண்பர் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானம் இருப்பதைக் பார்த்துவிட்டு, தனக்கு ‘ஏர் இந்தியா ஒன்னை’ வாங்கியுள்ளார். டிராக்டரில் குஷன் சீட் இருப்பது புதிதல்ல. ஆனால், பிரதமரின் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பல சொகுசு படுக்கைகள் உள்ளன. அது பிரதமருக்கு எதற்கு. மோடி வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கிறார்’ என்றார்.