சென்னை: கேரளாவுக்கு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது..’  என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் 28 வெளி மாநில ஆம்னி பேருந்துகளை அம்மாநில அரசு  பறிமுதல் செய்தது. விதிகளை மீறி இயங்கப்பட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுத்தது. இதில்,  தமிழகத்தை சேர்ந்த ஆம்னி பேருந்துகளும்  சிக்கியது.  விசாரணையில் ஒரு முறை கேரளாவிற்கு செல்வதற்கான தற்காலிக அனுமதியை பெற்று இயங்கி வந்தது கண்டு பிடிக்கப்பட்டதுடன், ஆம்னி பேருந்துகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் இருந்துகேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “07.11.2025′ அன்று  தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு அந்தப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிடப்பட்டு கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்து துறை 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கிடையேயான நீண்ட நாள் நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் பாதிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இந்நிகழ்வை தொடர்ந்து இன்று (07.11.2025 – 8.00 PM) முதல் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கு மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படையும் மற்றும் தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

எனவே இந்த விஷயத்தில் உடனடியாக தமிழக அரசும் கேரளா அரசும் தலையிட்டு, இரு மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். மேலும் வரியுடன் கூடிய அபராதமும் விதிக்கப்பட்டதால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இன்று புறப்பட வேண்டிய 105 பேருந்து தற்போது இயக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.