சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளார்.
சென்னையில் இன்று பட்டினப்பாக்கத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கான அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பணிக்காலத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையிலான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கட்டிடத்தைத் திறந்து வைத்து பணி ஆணைகளை வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், போக்குவரத்து ஊழியர்களுக்கு 96 மாதம் அகவிலைப்படி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார். ஆனால் அது அவரின் ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று ஏன் அவருக்குத் தெரியவில்லை, நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்குக் காரணம் ஒன்றிய அரசு நமக்குச் சேர வேண்டிய நிதியைக் கொடுக்காமல் இருப்பதால்தான் என்றார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், இந்த ஆண்டு போக்குவரத்துத் துறைக்கு புதிதாகப் பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டதன் அடிப்படையில், முதற கட்டமாக 100 பேருந்துகள் வாங்கப்பட்டு, அதனை முதல்வர் துவங்கி வைத்ததாக தெரிவித்தவர், இன்னும் இரண்டு மாதத்திற்குள்ளாக மேலும் 1,566 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அடுத்த கட்டமாக டெண்டர் விடப்பட்டுள்ள புதிய பேருந்துகள் 5 மாதத்திற்குள்ளாக, படிப்படியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், 24ம் தேதிக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து புறப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்தவர்,. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்கான பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. இதன் காரணமாகப் பேருந்துகளை இயக்க சிரமம் இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானப்பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து விட்டன. சிஎம்டிஏ ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கான தேவையான அனைத்தையும் செய்துகொடுத்துள்ளார் கள். இன்னும் கூடுதலாக என்ன வசதி வேண்டுமோ, அதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதனால், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
ஏனெனில் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முழுமையாகப் பேருந்துகளை அங்கிருந்து இயக்கி வருகிறது. இவர்களும் அங்கிருந்து இயக்க வேண்டும் என்பதுதான் போக்குவரத்துத் துறை சார்பாக வைக்கப்படும் அன்பான வேண்டுகோள்” என்றார்.