ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஆப்பிள் பழங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆப்பிள் பழங்கள் ஏற்றுமதி குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், ஓமன் நாட்டுக்கு காஷ்மீர் ஆப்பிள் ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் கப்பல் ஓமன் நாட்டை சென்றடைந்துள்ளது. 3 வகையான காஷ்மீர் ஆப்பிள்கள் அனுப்பப்பட்ட அந்த கப்பலை வரவேற்கும் நிகழ்ச்சியில், ஓமன் நாட்டு தூதர் முனு மஹாவர் கலந்து கொண்டு, விற்பனையை தொடங்கி வைத்தார்.
காஷ்மீர் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது ஆப்பிள்கள்தான். குளிர் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் பல வகையான ஆப்பிள்கள் விளைந்து வருகின்றன. இந்த ஆப்பிள்களுக்கு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பு உண்டு. காஷ்மீரில் விளையும் ஆப்பிள்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், காஷ்மீர் ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யப்படுமா என்ற சந்தேகம் எபந்தது. ஆனால், நடப்பு பருவத்தில் மொத்தம் 10.78 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான ஆப்பிள்கள் ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்தியாவின் மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும், இதுவரையில் 4.85 லட்சம் ஆப்பிள் பெட்டிகளை அரசு கொள்முதல் செய்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.32 கோடியாகும் என்றும், மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் தோட்டக்கலைத் துறை செயலாளரான மன்சூர் அகமது தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் ஓமன் நாட்டுக்கு 3 வகையான சிறப்பு காஷ்மீர் ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட கப்பல் ஓமனை சென்று அடைந்துள்ளது. அந்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அந்த ஆப்பிள்கள் விற்பனை செய்யும் நிகழ்ச்சியில் ஓமன் தூதர் முனு மஹாவர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.