டில்லி
மக்களவை இணைய தளத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு ஆர் எஸ் எஸ் உறுப்பினர் என குறிப்பிட்டிருந்தது நீக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இரண்டாம் முறையாக அமைச்சரவை அமைத்துள்ளது. இந்த புதிய மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். ஓம் பிர்லா ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் ஆவார். அத்துடன் பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின் போது இவர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ளார்.
மக்களவை இணைய தளத்தில் சபாநாயகர் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தன.
அந்த விவரங்களில் ”ஓம் பிர்லா ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் சார்பில் பல பணிகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக ராமர் கோவில் இயக்கத்தின் போது பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு கோவில் கட்டும் பணியில் தீவிரமாக இருந்துள்ளார். இந்த மசூதி உடைப்பு காரணமாக அப்போதைய உத்திரப் பிரதேச அரசு ஓம் பிர்லாவை சிறையில் அடைத்தது.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விவரங்கள் அனைத்தும் தற்போது திருத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விவரங்களில் ஓம் பிர்லா ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சார்ந்தவர் என்பதும் அவருடைய பாப்ரி மசூதி இடிப்புக்கான சிறை தண்டனை ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
இதில் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை என ராஜஸ்தானை சேர்ந்த ஒரு அரசியல் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த தலைவர், “ராஜஸ்தான் அரசியலை தெரிந்தவர்களுக்கு சபாநாயகராக தேர்வு செய்யும் அளவுக்கு ஓம் பிர்லா எத்தகைய ஒரு சாதனையும் புரியவில்லை என்பது தெரியும். அவர் ஆர் எஸ் எஸ் தொண்டர் மற்றும் பாபர் மசூதி இடிப்பில் முக்கிய பங்காற்றினார் என்பதை தவிர குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு அவர் எவ்வித பணியும் புரியவில்லை. இந்தியாவை இந்து ராஜ்ஜியமாக்க இவர் பாஜகவுக்கு உதவுவார் என்பது மட்டுமே இவர் தேர்வுக்கு காரணமாகும்” என தெரிவித்துள்ளார்.