டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் எனவும், அவற்றை ஒத்திவைக்கும் அல்லது ரத்துசெய்யும் திட்டமில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.
முன்னெப்போதும் இல்லாத வகையில், சீனாவில் உருவான கொரோனா எனப்படும் ஒரு வைரஸ், தற்போது உலகையே நடுங்க வைத்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியாகியிருப்பதோடு, உலகின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகின் வழக்கமான நிகழ்வுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தாண்டு ஜுலை மாதம் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன.
ஜப்பானும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறுகையில், “கொரோனா வைரஸ் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்யும் திட்டம் இல்லை. ஏற்கனவே அறிவித்த தேதியில் போட்டி துவங்கும்” என்றார்.