புதுச்சேரி

பூர்வ வகை கடல் ஆமை ஒன்று பழைய மீன்பிடி வலையில் சிக்கியதை அடுத்து வனத்துறையினர் மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.

அபூர்வமான வகை கடல் ஆமைகளில் இந்தியாவில் காணப்படும் ஆலில் ரிட்லி என்னும் ஆமையும் ஒன்றாகும்.  இவை புதுச்சேரி, கடலூர், மரக்காணம், உள்ளிட்ட பகுதி கடலோரங்களில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மே மாதம் வரை முட்டியிட வருவது வழக்கமாகும்.   இந்த ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளை பாதுகாக்க வனத்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி கடற்கரை பகுதியிலிவ்வகை ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சேகரித்து பாதுகாத்து வருகின்றனர்.  அதன் பிறகு குஞ்சுகள் பொரிந்ததும் அவற்றைக் கடலில் விட்டு விடுகின்றனர்.   இந்த அரிய வகை கடல் ஆமைகள் மீனவர்கள் பழுதாகித் தூக்கி எறியும் வலையில் சிக்கி அதிக அளவில் இறந்து மடிகின்றன.

இன்று பனித்திட்டு கடலோர பகுதியில் ஒர் பழைய மீன்பிடி வலையில் சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில் ஒரு ஆலிவ் ரிட்லி வகை ஆமை கரையில் ஒதுங்கியது.  இது குறித்து அந்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் அந்த ஆமையை மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர்.  இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.