சென்னை: நிலுவையில் உள்ள பழைய வழக்குகள் வியாழன்தோறும் விசாரணை  செய்து விரைவில் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக  சென்னை உயர்நீதி மன்றம்  தெரிவித்து உள்ளது. இந்தபுதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளன; நிலுவையில் உள்ள வழக்குகளில் 87% துணை நீதிமன்றங்களில் உள்ளன. ஒட்டுமொத்தமாக, கடந்த பத்தாண்டுகளில் நீதித்துறை படிநிலையின் ஒவ்வொரு மட்டத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. உயர் நீதிமன்றங்கள் மற்றும் துணை நீதிமன்றங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சாமானிய மக்கள் மீதான வழக்குகளில் வழக்கறிஞர்களும், காவல்துறையும், நீதிமன்றமும் ஆர்வம் காட்டாதே  வழக்குகள் தேக்கத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் வழக்குகள் உடனடியாக விசாரணைக்கு ஏற்கப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்படும் நிலையில், சாமானிய மக்களின் வழக்குகள் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இதனால் பல ஆயிரம் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன.  அதாவது தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்பது தான் அதன் பொருள்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர வியாழக்கிழமை தோறும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில்,   உயர்நீதிமன்றம் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட் வரை ஏராளமான வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.  இதுபோன்ற நிலுவையில்உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர உச்சநீதிமன்றம் எற்கனவே  ஆண்டுக்கு 4 முறை லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றம் நடத்த‘ அறிவுறுத்தியது. அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் அதாலத் நடத்தப்பட்டு, ஒரே நாளில் பல ஆயிரம் வழக்குகள் முடிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி,  கே.ஆர்.ஸ்ரீராம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி,  இனிமேல் வாரந்தோறும் வியாழக்கிழமை நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்து விரைந்து முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, ஜூடிசியல் பதிவாளர் கே.சீதாராமன்  நீதிபதிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ”20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் அனைத்து வகையான வழக்குகளும், அந்ததந்த நீதிபதிகள் முன்பு வாரந்தோறும் வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

இந்த நடைமுறை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்று வக்கீல்கள், வழக்குகளை நேரடியாக தொடரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.