சென்னை
சென்னை நகரில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பழைய கட்டிடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்தது. நகரில் கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி, செம்மஞ்சேரி, நீலாங்கரை, கொட்டிவாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்கிறது. காட்டாங்குளத்தூர் மற்றும் காவனுர் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. கூடுவாஞ்சேரியில் மழைநீர் பெருக்கெடுத்துக் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்தது.
செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 18 மி.மீ., மழையும், சோழவரம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் 14 மி.மீ., மழையும், செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 19.4 மி.மீ., மழையும் பதிவாகி உள்ளது. இங்குள்ள ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
தென் தமிழகத்தில் கடும் மழை காரணமாக நெல்லை முருகன்குறிச்சி ஆர்யாஸ் சூப்பர் மார்க்கெட் அருகே சாலையோர மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதைப் போல் ராமநாதபுரம், கடலூர், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே சென்னையில் பழைய கட்டடங்கள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.