போலந்தில் நடந்த வினோத சம்பவம் — இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டுடன் விளையாடிய இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

60 வயதான இந்த இருவரும் காட்டில் இருந்து கண்டெடுத்த பழைய குண்டை, “சேகரிப்பு பொருள்” என்று நினைத்து வீட்டுக்குக் கொண்டு வந்து வைத்திருந்தார்களாம்.

அதை என்ன செய்வதென்று போதையில் அந்த குண்டையே குறுகுறுவென உற்றுப்பார்க்க அது ‘பூம்’ என வெடித்துள்ளது.

வீட்டின் ஜன்னல் உடைந்து பறக்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வீட்டில் இருந்த மற்றொரு பெண்ணுக்கு போதை தெளியவில்லை என்றும் அவருக்கு ‘அல்கஹால்’ லெவல் 0.25%, அதாவது போலந்து சட்டப்படி அங்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்ட அளவை விட 12 மடங்கு அதிக போதையில் இருப்பதாக காவல்துறை தெரிவித்தனர்.

குண்டு வெடித்தாலும், அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை.

அப்பார்ட்மெண்ட் உரிமையாளர் போலீசாரிடம், “அந்த குண்டை பல ஆண்டுகளுக்கு முன் காடில் கண்டேன்” என்று கூறியுள்ளார்.

வீட்டை முழுவதும் சோதனை செய்த போலீசார், அங்கே இன்னொரு இரண்டாம் உலகப்போர் காலத்து வெடிபொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதை உடனே பாதுகாப்பாக அகற்றி, ராணுவ பயிற்சி மைதானத்தில் செயலிழக்கச் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில் “வெடிக்காத குண்டு மாதிரி ஏதாவது பொருள் கண்டால் அதைத் தொட்டுப் பார்ப்பதோ, வீட்டுக்குக் கொண்டு வருவதோ வேண்டாம்!

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை தூரம் வைக்கவும். காடு அல்லது வெளியில் இருந்தால் அந்த இடத்தை குறி போட்டு விட்டு, அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும்!” என்று கூறியுள்ளனர்.