எட்டயபுரம் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற திருவை திரித்தல் போட்டியில், 96 வயது மூதாட்டி ஒருவர் வெற்றி பெற்றார்.

முன்னொரு காலத்தில், கோவில் திருவிழாக்கள் என்றாலே, இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறும். அதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அக்கல்லை தூக்குபவர்களுக்குத்தான் பெண் கொடுப்போம் என்றும் சிலர் சொல்லுவதுண்டு. அப்போதெல்லாம் நெல்லை உலக்கையால் இடிப்பதும், குழம்பிற்கு அம்மியால் அரைத்த மசாலாவையும் பயன்படுத்தியும் வந்தனர். அதனால் கலப்படம் இல்லாத பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, ஆரோக்கியமாக மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று, ரெடிமேட் மசாலா, மிக்சி, கிரைண்டர் என நவீன வாழ்க்கை முறையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக எட்டயபுரம் அருகே உள்ள கோவில் ஒன்றில் கோடை விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. விழாவின் கடைசி நாளான நேற்று கோவில் முன்புள்ள திடலில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி, திருவை திரித்தல், அம்மி குத்துதல், பல்லாங்குழி, செதுக்குமுத்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கான நவதானியங்களை கல் திருவையில் போட்டு திரிக்கும் போட்டியில் இளம்பெண்கள் முதல் மூதாட்டிகள் வரை பங்கேற்றனர். இவர்களுக்கு திரிப்பதற்காக பாசி பயறு வழங்கப்பட்டது. இதில் 96 வயது வெங்கடம்மாள் வெற்றி பெற்றார்.

[youtube-feed feed=1]