உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் ஆட்சித்தலைவராக இருக்கும் அஜய் சங்கர் பாண்டே கண்டிப்புக்கு பேர் போனவர்.
ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முக்கிய பிரிவில் அவர் நேற்று காலை 9. 30 மணிக்கு திடீர் சோதனை மேற்கொண் டார். அந்த செக்ஷனில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லை. ஆனால் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மின் விசிறிகள் ஓடின.
ஏர்- கண்டிசனர்களும் ஆளில்லாத அறையில் குளு குளு காற்றை நிரப்பி கொண்டிருந்தன. இதனை பார்த்த ஆட்சியர் கடும் ஆத்திரம் அடைந்தார்.
சிறிது நேரம் கழித்து வேலைக்கு வந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் மின் விளக்கை அணைத்து விட்டு, ஃபேன் மற்றும் ஏ.சி.இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று ’’நூதன தண்டனை ‘’ வழங்கினார்.
உச்ச கட்டமாக யாரோ செய்த தவறுக்கு, ஆட்சியரும் தன்னை தண்டித்துக்கொண்டார்.
ஆம்.
ஆட்சியர் பாண்டேயும், தனது அறையின் ஃபேன், விளக்கு, ஏ.சி.ஆகியவற்றை அணைத்து விட்டு, ஒரு மணி நேரம் வேலை செய்தார்.
-பா.பாரதி.