டில்லி

பாஜக பிரமுகர்களான ஜனார்த்தன ரெட்டி சகோதரர்களின்  சுரங்க ஊழலைக் கண்டுபிடித்த ஐ எஃப் எஸ் அதிகாரி கைலோல் பிஸ்வாஸ் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் மணல் சுரங்கம் உள்ளிட்ட பல பணிகளில் காலி ஜனார்த்தன ரெட்டியின் நிறுவனம் ஈடுபட்டு வந்தது.   அவர் மற்றும் அவருடைய சகோதரர்கள் நிர்வாகிகளாக இருந்த இந்த நிறுவனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும்  அதில் அப்போதைய   முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டிக்கு தொடர்புள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த முறைகேடுகள் குறித்துக் கண்டறிந்த  ஐ எஃப் எஸ் அதிகாரியான கைலோல் பிஸ்வாஸ் இது குறித்து ரெட்டி மற்றும் அவர் சகோதரர்களுக்கு நோட்டிஸ் அனுப்பினார்.  அப்போது முதல் இந்த ஊழல் விவகாரம் மட்டுமின்றி கைலோல் பிஸ்வாஸ் பெயரும் பிரபலம் அடைந்தது.   பிஸ்வாஸுக்கு இதை அடுத்துப் பல மிரட்டல்கள் வந்ததையொட்டி அவர் தலைமறைவாக வசிக்க நேரிட்டது.

அதன் பிறகு ஜனார்த்தன ரெட்டி பாஜகவில் இணைந்து புகழடைந்தார்.    குற்றம் சாடப்பட்டுள்ள ரெட்டி பாஜகவின் கூட்டங்களில் கலந்துக் கொள்வதைப் பற்றி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆட்சேபித்து வந்தனர்.    கர்நாடக பாஜகவின் முக்கிய பிரமுகராக தற்போது ஜனார்த்தன ரெட்டி உள்ளார்.    ரெட்டியின் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

தற்போது ஆந்திரப் பிரதேசத்தில் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் முதல்வராகி உள்ளார்.   மத்திய அரசு முறைகேடுகள் செய்த மற்றும் சரியாக பணிபுரியாத அரசு அதிகாரிகளைக் கட்டாய ஓய்வில் அனுப்பி வருகிறது.   இதற்கு இரு அதிகாரிகளின் பெயரை மாநில அரசு அறிவிக்க வேண்டும்.  அதில் ஒருவாராக ஆந்திர  அரசு கைலோல் பிஸ்வாஸ் பெயரை அறிவித்துள்ளது.  அதன்படி பிஸ்வாஸ் கட்டாய ஓய்வில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.