ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குவாக்கியா காவல் எல்லைக்கு உட்பட்ட நாதுபாரா கிராமத்தைச் சேர்ந்த அந்த 14 வயது சிறுமி தனது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சாப்பிட்ட இரவு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.

இதை சாப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் மயக்கமடைந்து தூங்கியதை தொடர்ந்து தங்கடி பகுதியில் உள்ள சியாரியா மன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான தீபக் சேத்தி என்பவருடன் அவர் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் இதே தீபக் சேத்தி-யுடன் வீட்டை விட்டு ஓடிய அந்த சிறுமியை காவல்துறையினர் கேரளாவில் இருந்து மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற புதனன்று பிற்பகல் அந்த சிறுமி படிக்கும் பள்ளிக்கு வந்த தீபக் சேத்தி சிறுமியிடம் தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் இருவரும் தப்பிச் சென்றதாக அந்த சிறுமியின் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடும்ப உறுப்பினர்களுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு 14 வயது சிறுமி காதலனுடன் தப்பிச் சென்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள குவாக்கியா காவல் நிலைய அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.