புவனேஸ்வர்:

ஓடிசாவில் பிஜூ ஜனதா தள கட்சியின் கேந்திரபாரா தொகுதி எம்.பி. பய்ஜெயந்த் ஜெய் பாண்டாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து முதல்வர் நவீன் பட் நாயக் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் கட்சியின் தொண்டர்களிடம் தவறாக நடந்து கொண்டார், தொகுதி மேம்பாட்டு நிதியை மோசடி செய்தார், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டார் என்று மீடியாக்களில் செய்தி வெளியான உடனேயே அவர் மீது முதல்வர் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளார்.

உண்மையிலேயே வெளியில் இந்த காரணம் கூறப்பட்டாலும், அவர் மீதான நடவடிக்கைக்கு வேறு சில காரணங்கள் கூறப்படுகின்றன. அவர் பாஜக.வின் கைப்பாவையாக மாறி, அவர்களது உத்தரவுப்படி செயல்பட்டு வந்த ரகசிய தகவல் முதல்வருக்கு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையிலேயே பாஜக.வுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஓடிசாவில் நவீன் பட் நாயக் 17 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளார். இவ்வளவு நாட்கள் பதவி இருந்தால் எதிர்ப்புகள் அதிரித்திருப்பதில் ஆச்சர்யம் இருக்க முடியாது. 2009ம் ஆண்டில் தான் பாஜக பீஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தது. 2014ம் ஆண்டு காங்கிரஸ் மீதான எதிர்ப்பு காரணமாக லோக்சபா தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2019ம் ஆண்டு சட்டமன்றம், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தற்போது இங்கு மோடியின் செல்வாக்கு உச்சத்தில் இருப்பதாக சர்வே முடிவகள் தெரிவித்துள்ளது. இதனால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறலாம் என்று பாஜக கருதிக் கொண்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி என்ற கோஷத்தும் தனித்து தேர்தல் களம் காண பாஜக திட்டமிட்டுள்ளது.

பீஜூ ஜனதா தளத்தில் நவீன் பட் நாயக்கிற்கு அடுத்து இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் இல்லை. அவரது குடும்பத்தினர் யாரும் அரசியலில் ஆர்வம் இல்லை. இந்த சூழ்நிலையில் தான் ஓடிசாவில் பாஜக ஆட்சியை கொண்டு வர அக்கட்சி மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வரும் தகவல் முதல்வருக்கு தெரியவ ந்தது. இதற்கு எம்பி பாண்டாவை பகடைக்காயாக பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

140 இடங்களை கொண்ட ஒடிசா சட்டமன்றத்தில் பாஜக.வுக்கு தற்போது 10 எம்எல்ஏ.க்கள் தான் உள்ளனர். அவ்வாறு இருக்கும் போது ஆட்சி அமைப்பது எப்படி சாத்தியம்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு பல மாநிலங்களில் இதை சாத்தியமாக்கியுள்ளது.

அஸ்ஸாம், ஹரியானா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் முன்பு இருந்ததை விட பாஜக.வுக்கு தற்போது 10 மடங்கு உறுப்பினர்கள் உள்ளனர். இதே பாணியை தான் ஒடிசாவிலும் கடைபிடித்து நவீன் பட் நாயக்கிற்கு உள்ள எதிர்ப்பை பயன்படுத்திக் கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.