மும்பை,

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் சிவசேனா கட்சி எம்.பி.யான ரவீந்திர கெய்க்வாட்.

கடந்த மார்ச் 23-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த போது, இருக்கை விஷயமாக விமான ஊழியரை செருப்பால் அடித்ததாக புகார் எழுந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

அதைத்தொடர்ந்து அவருக்கு விமான நிறுவனங்கள், விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்தது. இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கெய்க்வாட்டுக்கு தடை விதித்தது சரியே என்று கூறினார்.

இதன் காரணமாக அவர் வெவ்வேறு வழிகளில், விமான டிக்கெட் பெற முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் விமான நிறுவன ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அவரது விமான பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தனது கட்சியும் ஆதரவு அளிக்காத நிலையில்  கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார் கெய்க்வாட்.

இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதிராஜூவிற்கு , கெய்க்வாட் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. அதற்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், தனக்கு விமானத்தில் பயணிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.