சென்னை: ஜூன் முதல் வாரத்தில் செவிலியர்கள் பணியிட மாற்றம் நடத்தப்படும் என்றும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 4,308 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்று வரும் மருத்துவ பணியாளர்களின் கலந்தாய்வை ஆய்வை செய்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மருத்துவர்களின் பணி மாறுதல் வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்றது. கடந்த ஓராண்டில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற 14,156 பேருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியவர்,  கொரோனா பேரிடர் காலத்தில் முழு அர்ப்பணிப்போடு பணியாற்றிய மருத்துவர்களுக்கு மாறுதல் என்பது ஒரு பரிசாக அமைந்துள்ளது.நிரப்பப்படாத 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் எம்.ஆர்.பி மூலம் நிரப்பப்படும் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான 1000 பணி மாறுதல் ஜூன் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக கூறியவர், இந்த துறையில் 1021 மருத்துவர் இடங்களும், 18 வகையான சுகாதாரப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 4,308 பணியிடங்களை நிரப்ப உள்ளோம். இதற்க நான்கு மாதகால அவகாசம் தேவைப்படுகிறது என்றார். மேலும், தமிழ்நாடு முழுவதும்,  மூவலூர் இராமாமிர்தம் நிதித்திட்டத்தின் கீழ் 6,00,000 பேருக்கு நிதியுதவியாக ஆயிரம் ரூபாய் வழங்க கணக்கு எடுத்துவருவதாக தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்து இருக்கிறார். தினமும் 15,000 பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் 2, பெல்ஜியம் 3, கனடாவில் 2, ஜெர்மன் 1, பிரான்ஸ் 1, இத்தாலி 1 பேருக்கும் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கிறது.

குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்கள் கண்காணிக்க படுவார்கள். குரங்கு அம்மை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மேலும் இந்த நோய் தொற்று நோயும் கிடையாது. ஏற்கனவே இருக்கக்கூடிய சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை போன்ற அறிகுறிகள்தான் குரங்கு அம்மை வருவதற்கான அறிகுறிகள் ஆகும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 70 லட்சம் பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.