ரியாத்:
அரபு நாடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரம்ஜான் காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களில் இருந்து வெளியேறும் இந்தோனேசியா மற்றும் பிலிபைன்ஸ் நாடுகளின் வீட்டு பெண் பணியாளர்ளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
உடல் நலக் கோளாறு, கூடுதல் பணிச்சுமை, கொடுமைபடுத்துதல், உடல் ரீதியான துன்புறுத்துதல், போதுமான உணவு வழங்காமை, ஊதியம் வழங்காதது, ஓய்வின்றி நீண்ட பணி நேரம், பணி விசா வழங்காமை போன்ற பல காரணங்களால் இந்த வெளியேற்றம் நடந்துள்ளது என்று காலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 60 பெண்கள் இதுபோல் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் சர்வதேச தொழிலாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், கடந்த மாதம் இந்த எண்ணிக்கை 114ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான பெண்கள் சுற்றுலா விசாவில் வந்து வேலையை தேடியவர்களாக தான் இருக்கின்றனர். இவர்கள் ரம்ஜானை கொண்டாடும் வகையில் அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்கள் கடந்த மாதத்திற்கு முன்பு தான் வந்தார்கள். அவர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் 5 நாட்கள் மட்டுமே இருந்து விட்டு ஓடி வந்துவிட்டார்கள். கடந்த ஜூன் 27ம் தேதி தஞ்சமடைந்த 114 பேரில் 90 சதவீதம் பேர் சுற்றுலா விசாவில் வந்தர்வர்கள். 7 சதவீதம் பேர் மட்டுமே பணியாளர் விசா மூலம் வந்துள்ளனர். இந்த முகாமில் தஞ்சமடைந்தவர்களில் ஒருவர் மட்டுமே 11 மாதங்களாக உள்ளார். அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதத்தில் 460 பெண்கள் இந்த முகாமில் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு பணிக்கு என்று பிரத்யேக சட்ட நடைமுறைகளை வகுக்க இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.