புதுடெல்லி: புயல்கள் அதிகமாக உருவாவதற்கு உலகம் வெப்பமயமாதல் முக்கிய காரணம் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த விகிதம் 32% அதிகரித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வங்காளக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் இதன் விகிதம் 11% என்பதாகவும், அதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் 32% என்பதாகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கு காரணம் உலக வெப்பமயமாதலே என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்தாண்டு ஒடிசாவைத் தாக்கிய பானி புயல் மற்றும் அதிக மழைப்பொழிவைக் கொண்டுவந்த வாயு புயல் ஆகியவற்றைக் குறிப்பிட்டனர்.
பூமி வெப்பமயமாவதால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5 புயல்கள் உருவாகி வருவதாகவும், அவற்றில் 3 புயல்கள் தீவிரமானது என்றும் கூறுகின்றனர். 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் தலா 7 புயல்கள் உருவாகின என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.