டில்லி
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறச் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து ஒவ்வொரு மசூதியிலும் அறிவுரைகள் அளித்து வருகின்றனர்.
நாடெங்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்கள் இடம் பெற வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட உள்ளதாக பாஜக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். தற்போது ஜனாதிபதி குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அந்த சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்குக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
எனவே குடியுரிமை பெறாத இஸ்லாமியர்கள் குடியுரிமைப் பெற்று தேசிய குடியுரிமை பதிவேட்டில் அவசியம் இடம்பெற வேண்டும் என்னும் அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே இஸ்லாமியர்களுக்கு நாடெங்கும் உள்ள மசூதிகளில் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம் பெறத் தேவையான நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அறிவுரைகள் வீடியோ மூலமும் வாய்மொழியாகவும் அனைத்து மசூதிகளிலும் வழஙக்படுகிறது. குறிப்பாகப் பெயரில் எழுத்துப்பிழைகள் குறித்துக் கற்பிக்கப்படுகிறது. உதாரணமாக முகமது என்னும் பெயர் பல விதமாக உச்சரிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக எழுதுகின்றனர்.
அத்துடன் பெரும்பாலான முதியோர்கள் வீடுகளில் பிறந்ததால் பிறப்பு சான்றிதழ் இருக்காது. ஆகவே அவர்கள் வேறு ஆவணங்களை தயராக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக ஆதார, பான் அட்டை, வாக்காளர் அட்டைகளில் ஒரே தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும். இவ்வாறான அடையாள அட்டைகள் இல்லாதோர் உடனடியாக அதைப் பெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு மௌலானா இம்ரான் மக்சுத், “இந்த அறிவுரைகளை நாங்கள் ஏற்கனவே வழங்கத் தொடக்கி விட்டோம். இதற்கான பயிற்சி மையத்தையும் ஆரம்பித்துள்ளேன். கர்நாடக மாநிலத்தில் உள்ள 1800 மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை தொழுகையில் இது குறித்து தெரிவித்து வருகிறோம்” எனக் கூறி உள்ளார்.