புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அவர்களின் வருகையால், பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாஜக கூட்டணியில் நீடித்து வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அங்கிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதல்வரான என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு அம்மாநிலத்தில் தனிச்செல்வாக்கு உண்டு. எளிமையான மனிதரான ரங்கசாமி, மக்கள் பிரச்சினைக்காக தனது புல்லட்டில் நேரடியாக சென்று களமிறங்குவார். இதனால், அவருக்கு மக்களிடை யே எப்போதும் மரியாதை உண்டு. அங்கு, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, ரங்கசாமி தலைமை யில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், பாஜகவின் நடவடிக்கை காரணமாக, என்.ஆர்.காங்கிரஸ், அங்கிருந்து வெளியேறும் சூழல் உருவாகி உள்ளது.
பாஜக தலைமை என்ஆர் காங்கிரஸ் இடையே இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில், ரங்கசாமி அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், எம்எல்எக்கள் என பலர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால், அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தியுடன், அதிமுகவுடன் சேர்ந்து, புதுச்சேரியில் பாஜக ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று கனவில் மிதந்து வருகிறது.
நமச்சிவாயத்தை நம்பி, ரங்கசாமியை கூட்டணியில் இருந்து கழற்றிவிடும் வகையில், பாஜக புதுச்சேரியில் காய்களை நகர்த்தி வருகிறது. இது ரங்கசாமிக்கு மிகுந்தமன உளைச்சலை எற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், புதுச்சேரி மாநிலத்தின் மக்களின் மனநிலை குறித்து, ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. அதில், என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. மக்களின் விருப்பமான முதல்வர் வேட்பாளர் ரங்கசாமிதான் 45.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியாத பாஜக, கிரண்பேடி மூலம் பின்வாசல் வழியாக 3 பேரை நியமன எம்எல்ஏக்களை அறிவித்து, நாராயணசாமி அரசு கவிழ காரணமாக இருந்தது. இந்த நிலையில், மாநிலத்தில் பாஜக காலூன்ற வேண்டுமென்றால், ரங்கசாமியின் தயவு கட்டாயம் தேவை. ஆனால், பாஜகவோ, ரங்கசாமி கட்சியைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தையும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓடிவந்த சிலரையும் நம்பி, என்ஆர் காங்கிரஸ் கட்சியை ஓரம்கட்டி வருகிறது.
இதை அறிந்துகொண்டுள்ள முன்னாள் முதல்வர் ரங்கசாமி, விரைவில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக புதுச்சேரியில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.