புதுச்சேரி
புதுச்சேரி மாநில சபாநாயகர் பதவி பாஜகவுக்கு அளித்து என் ஆர் காங்கிரஸ் சமாதானம் செய்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 30 இடங்களில் என் ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி 16 இடங்களைப் பிடித்தது. பாஜக உறுப்பினர்கள் ஆதரவுடன் கடந்த மே 7 ஆம் தேதி அன்று என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்றார்.
ஆயினும் இரு கட்சிகளுக்கு இடையே அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்தது. இதனால் இதுவரை அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை. பாஜக தலைவர்களும் முதல்வர் ரங்கசாமியும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இன்று பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், “பாஜக மற்றும் என் ஆர் காங்கிரஸ் இடையே அமைச்சரவை பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜகவுக்குச் சட்டப்பேரவை சபாநாயகர் பதவி அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது மூன்று தினங்களில் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.