ஷில்லாங்:
மேகாலயாவில் பா.ஜ.க. ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியது. முதல்வராக கான்ராட் சங்மா பதவி ஏற்கவுள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. மேகாலயாவில் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. காங்கிரஸ் 21 தொகுதிகளையும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், பாஜக 2 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இங்கு ஆட்சியமைக்க 31 தொகுதிகள் பெற்றிருக்க வேண்டும். அதனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டது. எனினும் இன்று காலை கவர்னரை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
இதற்கிடையில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். முதல்வராக கான்ராட் சங்மா பதவி ஏற்கவுள்ளார். இக்கட்சிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. பாஜக சார்பில் ஒருவர் அமைச்சராக பதவி ஏற்கவுள்ளார். 7 தொகுதிகளை கைப்பற்றியுள்ள ஐக்கிய ஜனநாயக கட்சியும் தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளது. வரும் 6ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்தியிலும், ராஜஸ்தான், மணிப்பூர் மாநிலங்களில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி மேகாலயாவில் தனித்து போட்டியிட்டது. தற்போது தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வடகிழக்கு பகுதியில் நடந்த 3 மாநிலங்களையும் பாஜக வசம் சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.