கொழும்பு

முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது நாடு திரும்ப சரியான நேரம் இல்லை என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறி உள்ளார்.

கடந்த சில காலமாக இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக மக்கள் அரசுக்கு எதிரான  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையொட்டி ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ஜூலை 13ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார்.

விரைவில் சிங்கப்பூர் அரசின் விசா  முடிய உள்ளதால் கோத்தபய விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது குறித்து இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு தற்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர்

”விரைவில் கோத்தபய நாடு திரும்புவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. கோத்தபய நாடு திரும்ப தற்போது சரியான நேரம் இல்லை. அவர் நாடு திரும்பினால் அது, பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இலங்கையில் எரிந்து கொண்டு இருக்கும் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்,’’

எனக் கூறி உள்ளார்.