புதுடெல்லி: அமேசானின் அலெக்ஸா செயலியில் தற்போது இந்தி மொழி வசதியும் சேர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஒரு இந்தியர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிறந்த 44 வயதான ரோகித் பிரசாத் தான் இதற்கான காரணகர்த்தா. இவர், அமெரிக்க நாட்டிலுள்ள அமேசானின் உலகளாவிய தலைமை அலுவலகத்தின் துணை தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான இந்தியர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறிவருவதால் இந்த மாற்றம் அவசியம் தேவையான ஒன்று என்ற பிரசாத், இந்த புதிய வசதியைக் கொண்டுவருவது அதிக சவாலான ஒன்றாக இருந்ததாகவும் கூறுகிறார்.
வார்த்தைகளின் ஒலி மாறுபாடுகள், உச்சரிப்புகள் மற்றும் 50 முதல் 100 கி.மீ. தூர இடைவெளிகளுக்குள் இந்தி மொழியில் உள்ள வித்தியாசம் ஆகியவையே சவாலுக்கான காரணங்கள் என்று குறிப்பிட்டார்.
பிஐடி கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் துறையில் தனது இளநிலைப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பிரசாத், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் தனது முதுநிலைப் படிப்பை முடித்தார்.