சர்வதேசப் புகழ்பெற்ற BBC நிறுவனம் தனது முதல் தொலைக்காட்சி சேவையான BBC Television Service ஐ இங்கிலாந்தின் Isle of Man தீவில் சுமார் 200 இணைப்புக்களுடன் துவக்கிய தினம் இன்று. ( 02 நவம்பர் 1936 )
பிபிசி செய்தி நிறுவனம் ஐக்கிய நாடுகளை சேர்ந்த, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிபிசி என்பது பிரிட்டன் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம், 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 1936ம் ஆண்டு நவம்பர் 02ந்தேதிமுதன்முதலாக தொலைக்காட்சி சேவையை தொடங்கியது.
பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது. தன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.
இந்நிறுவனம் வழங்கும் செய்திகள் உலகளவில் சேகரிக்கப்படுகின்றது. இதன் பிரதான பணி ஐக்கிய இராச்சியத்திலுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பாக ஒலிபரப்புவதாகும். இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது.
உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கும் பிபிசி வானொலி பிபிசி தமிழோசை என்ற பெயரில் நாள்தோறும் அரை மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. தமிழோசை நிகழ்ச்சிகளை பெப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி ஒலிபரப்புச் செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளை பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பெப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்—திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகிறது.
ஜிஎம்டி நேரப்படி மதியம் இரண்டு மணிக்கு லண்டனிலிருந்து ஒளிபரப்பப்படும் பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையை, நேயர்கள் இந்திய நேரப்படி மாலை ஏழு முப்பது மணிக்கு தந்தி தொலைக்காட்சியில் நேரலையாக காணலாம்.
நேரலை ஒளிபரப்பு முடிந்த பின், bbctamil.com என்ற இணையத்தளத்திலும், பிபிசி தமிழின் யூ ட்யூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் நேயர்கள் காணலாம்.