டில்லி

ம்மை அரசியல் பணிகளில் இருந்தும் அரசை விமர்சிப்பதில் இருந்தும் எதுவும் தடுக்காது எனக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

வெகுநாட்களாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்புக் குழுவின் கருப்புப் பூனை படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது.  மத்திய அரசு சமீபத்தில் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது  அதன்படி முன்னாள் பிரதமர்களுக்கு பதவி விலகி 5 ஆண்டுகள் வரை அவருக்கும் குடும்பத்துக்கும் கருப்புப் பூனை பாதுகாப்பு வழங்கப்படும் என மாற்றப்பட்டது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 30 ஆண்டுகள் ஆக உள்ளது.  எனவே அவருடைய குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கருப்புப் பூனைப்படை விலக்கப்பட்டு மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

சமீபகாலமாக பிரியங்கா காந்தி தொடர்ந்து அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.   இந்நிலையில் அவருக்குக் கருப்புப் பூனைப்படை பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதால் அவர் பல ஆண்டுகளாக வசித்து வரும் டில்லி மோதி எஸ்டேட் பங்களாவில் இருந்து காலி செய்ய மத்திய வீட்டு வசதித்துறை உத்தரவிட்டது.

 வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் அவர் காலி செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் அவரிடம் அபராத வாடகை வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    கடந்த சில நாட்களாகப் பிரியங்கா அரசை விமர்சிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பிரியங்கா காந்தி தம்மை அரசியல் பணிகள் புரிவதில் இருந்தோ அல்லது அரசை விமர்சனம் செய்வதில் இருந்தோ எதுவும் தடுக்காது எனத் தெரிவித்துள்ளார்.