டில்லி:

மூத்த வக்கீல் ராம்ஜெத் மலானி ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளாக வக்கீல் பணியாற்றி வரும் ராம்ஜெத் மலானிக்கு தற்போது 94 வயதாகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு இந்திய பார் கவுன்சில் சார்பில் டில்லியில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட ராம்ஜெத்மலானி பேசுகையில், ‘‘ தற்போதைய நாட்டின் சூழ்நிலை பேரிடராக உள்ளது. தொடர்ந்து ஊழல் அரசியல் வாதிகளுக்கு ஆதரவாக வாதாட வேண்டிய நிலை ஏற்படும் வகையில் உள்ளது. நாடு தற்போது நல்ல நிலையில் இல்லை. கடந்த ஆட்சியும், தற்போதைய ஆட்சியும் நாட்டை மோசமான நிலையை நோக்கி கொண்டு சென்றுள்ளன.

இந்த நிலையை பார் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நல்ல குடிமகன்களும் எதிர்க்க வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. நான் வக்கீல் தொழிலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனினும் நான் உயிரோடு இருக்கும் புதிய பணியை மேற்கொள்வேன். ஊழல் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதை தடுத்து இந்தியாவை புதிய நிலையை அடைய செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.