சென்னை: தமிழ்நாடு அரசு நடப்பாண்டு இறுதிக்குள் 7,535 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆசிரியர்களை நியமிக்க விரும்பாததால் தகுதித்தேர்வு நடத்தவில்லையா? நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை தி.மு.க. அரசு நடத்தவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 2025-ம் ஆண்டில் மொத்தம் 9 வகையான தேர்வுகளை நடத்தப்போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட 3 தேர்வுகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தவை. அவற்றில் இரு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்ப நடைமுறைகளும் தொடங்கி விட்டன.
1915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1205 பட்டதாரி ஆசிரியர்கள், 51 வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகிய 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் நடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை.
இத்தகைய சூழலில் இனியும் ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என்பதால் எதற்காக தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என நினைத்து விட்டதால் தான் நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை தி.மு.க. அரசு நடத்தவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.
அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று (மார்ச் 24) ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நடப்பாண்டில் தோராயமாக 7,535 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அதில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகள் வரும் ஜூலையில் நடத்தப்படும்.
காலியாக உள்ள 1,915 முதுகலை ஆசிரியர் (Post graduate assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி, போட்டித் தேர்வுகள் வரும் நவம்பரில் நடத்தப்படும்.
1205 பட்டதாரி ஆசிரியர்களை (BT Assistants / BRTE) நியமன செய்வதற்கான அறிவிப்புகள் செப்டம்பர் மாதத்தில் வெளியாகி, போட்டித் தேர்வு டிசம்பரில் நடைபெறும்.
மொத்தம் ஏழு வகையான போட்டித் தேர்வுகள் மூலம், 7,535 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதில் சில அறிவிப்புகள் ஏற்கனவே கடந்த ஆண்டே வெளியிடப்பட்ட நிலையில், அதை சுட்டிக்காட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.