மும்பை: மகாராஷ்டிர பாஜக தலைவர் பங்கஜா முண்டே, தான் இனி கட்சியின் மையக் குழுவில் உறுப்பினராக இல்லையென்றும் ஆனாலும் கட்சியை விட்டு வெளியேற மாட்டாரென்றும் 12ம் தேதியன்று தெளிவு படுத்தினார்.

மறைந்த தனது தந்தை கோபிநாத் முண்டேவின் பிறந்த நாள் விழாவில் இன்று பீட் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய பங்கஜா, தான் கட்சியில் தொடர்ந்து இருப்பது குறித்து முடிவு செய்ய பாஜகவுக்கு சுதந்திரம் உள்ளது என்றார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிர்ச்சியான தோல்விக்குப் பின்னர் அவர் பாஜகவை விட்டு வெளியேறுகிறார் என்ற ஊகங்களுக்கு மத்தியில், 12ம் தேதியன்று நடைபெற்ற பேரணி அரசியல் வட்டாரங்களில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. பங்கஜா இந்த வருடாந்திர நிகழ்வை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகிறார்.

பாஜகவின் தலைவரான மறைந்த கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா, மகாராஷ்டிராவில் “மாற்றப்பட்ட அரசியல் சூழ்நிலையை” கருத்தில் கொண்டு தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்த தனது சமூக ஊடக இடுகையுடன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

கடந்த 10ம் தேதி மும்பையில் நடந்த மாநில பாஜக மையக் குழு கூட்டத்தையும் அவர் தவிர்த்திருந்தார். 12ம் தேதி, தாம் இனி முக்கிய அணியில் உறுப்பினராக இல்லை என்று அறிவித்தார்.

இன்று பீடில் உரையாற்றும் போது, பார்லி தொகுதியை தனது உறவினர் மற்றும் என்.சி.பி தலைவர் தனஞ்சய் முண்டேவிடம் இழந்துவிட்டதை மறைமுகமாகத் தெரிவித்த அவர்அதற்குக் காரணமாக தன் கட்சியைச் சேர்ந்தவர்களே என்றும் கூறினார்.

உட்கட்சி பூசல் காரணமாக தேர்தலில் தோல்வியுற்றதற்காக கட்சி மேல் அதிருப்தி தெரிவித்த இரண்டாவது தலைவர் முண்டே ஆவார்.  முன்னதாக ஏக்நாத் காட்ஸே இவ்வாறு குற்றம் சாட்டியிருந்தார்.