சென்னை
தமிழகத்துக்கு மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு ஜி எஸ் டி பங்கு தரவேண்டியது உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசு அறிவித்துள்ள வருமான வரி திட்டத்தின் வருமான வரி குறைவதற்குப் பதிலாக அதிகரித்துள்ளதாகப் பலரும் குற்றம் சாட்டி உள்ளனர்.
சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழில்துறையினருக்கான கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டு உரையாற்றினார். ஜி எஸ் டி வரியில் தமிழகத்தின் பங்காக ரூ. 4000 கோடிக்கு மேல் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளதாகத் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் கூறி இருந்தார் இதற்கு நிர்மலா விளக்கம் அளிததார்
நிர்மலா சீதாராமன், “தமிழகத்துக்கு மட்டுமின்றி பல மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி பக்கு தர வேண்டியது உள்ளது. விரைவில் தமிழக அரசுக்கு வர வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க உள்ளது. எந்த ஒரு மாநிலத்துக்கும் நிதியைக் குறைக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை.
பெட்ரோல் மற்றும் டிசலை ஜி எஸ் டி வரி வரம்புக்குள் கொண்டு வர அனைத்து மாநிலங்களும் கேட்டுக் கொண்டால் மத்திய அரசு அதற்கு தயாராக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை ஜி எஸ் டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபமும் கிடையாது.
இந்தியப் பொருளாதாரம் தற்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெளிநாட்டு நேரடி முதலீடு உச்சத்தைத் தொட்டுள்ளது.” என விளக்கம் அளித்தார்.