
ஐதராபாத்: குறுகிய ஓவர் கிரிக்கெட்டிற்காக, இந்திய அணியில் விராத் கோலியை நீக்கிவிட்டு, ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டியதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார் விவிஎஸ் லஷ்மண்.
ரோகித் ஷர்மாவின் தற்போதைய நிலை, அப்படியே தொடர வேண்டுமென்றும், அதேசமயத்தில், ரோகித் ஷர்மா போன்ற ஒரு வீரர், இந்திய டெஸ்ட் அணியில் தவறாது இடம்பெற வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “ரோகித் ஷர்மா ஒரு சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. விராத் கோலி இல்லாத சமயங்களில், அவர் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகள் வெல்வதென்பது எளிதான காரியமல்ல.
நெருக்கடியான நேரங்களில், அவர் அணியைக் கையாளும் விதம் அருமை. தனது மும்பை அணியை அவர் சிறப்பான முறையில் கட்டமைத்துள்ளார். எனவே, இந்திய அணிக்கும் ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்கு அவர் தகுதிவாய்ந்தவர்தான் என்றாலும்கூட, கேப்டன் மாற்றத்தைக் குறித்து இப்போது யோசிக்க வேண்டியதில்லை.
தற்போதைய நிலையில், விராத் கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே, கேப்டனை மாற்ற வேண்டிய அவசியமில்லை” என்றுள்ளார் லஷ்மண்.
[youtube-feed feed=1]