பெங்களூரு: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதில் தனக்கு ஆர்வமில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவருமான தேவகெளடா.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் தும்குரு தொகுதியில் போட்டியிட்ட தேவகெளடா அதிர்ச்சி தோல்வியடைந்தார். எனவே, அவர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றிபெறலாம் என்று செய்திகள் பரவின.
இந்நிலையில்தான், தேவகெளடா மாநிலங்களவை உறுப்பினராவதில் தனக்கு ஆர்வமில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு ஆர்வமில்லை. நான் இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
நான் நாடாளுமன்ற உறுப்பினராவதைவிட, எங்களது கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்துவதே முக்கியம்” என்றார்.
ஆனால், அரசியல் தலைவர்கள் அனைவரும் தேவகெளடாவை மதிக்கிறார்கள் எனவும், கர்நாடக மாநிலத்திற்காக டெல்லியில் குரல் கொடுக்க ஒரு வலுவான நபர் தேவை என்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.