திருப்பத்தூர்: திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனுக்கு சொந்தமான பல கோடி பெருமானமுள்ள சொகுசு பண்ணைவீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அங்கு பணம் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்ததுடன், அவரது வீட்டினுள் 100 ரூபாய் வைக்கமாட்டியா? என லிப் ஸ்டிக்கால் எழுதிச்சென்றுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பண்ணை வீட்டில் நடந்த கொள்ளை நடைபெற்றது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் கதவுகளை உடைத்து, கொள்ளையடிக்கச் சென்றவர்கள், அங்கு எதிர்பார்த்த அளவுக்கு பணமோ, பொருட்களோ இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். அவரது வீட்டை ஒட்டிய பக்கத்து வீட்டு சுவற்றில் எழுதி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் மஞ்சக் கொல்லை என்ற இடத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு, 25 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இதன் மதிப்பு பலகோடி என கூறப்படுகிறது. இந்த பண்ணை வீட்டை, வேலையாட்களான பிரேம் குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பராமரித்து வருகின்றனர். இவர்கள் அந்தப் பண்ணை வீட்டு வளாகத்தில் உள்ள தனி வீட்டில் வசித்து வருகின்றனர்
இந்த பண்ணை வீட்டின் கதவை உடைத்து உள்ளே கடந்த 11ம் தேதி நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள், எதிர்பார்த்த அளவுக்கு பணம் பொருட்கள் கிடைக்கமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், கடந்த பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஏராளமான பணம் சிக்கியதுபோல, இந்த முறையும் பணம் ஏதும் பதுக்கி வைத்திருப்பார் என்ற ஆசையில் உள்ளே புகுந்த கொள்ளையர்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை.
இதனால் கடுப்பான கொள்ளையர்கள், அங்குள்ள பல ‘பொருட்களை அடித்து நொறுக்கியதுன், அங்கு கிடந்த லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து சுவரில், ‘‘ஒரு நூறு ரூபாய் வெக்க மாட்டியா?’’ என நக்கலாக எழுதியுள்ளனர். அங்கிருந்த நோட்டு புத்தகத்திலும், ‘‘ஒரு ரூபாய் கூட இல்ல, எடுக்கல’’ என எழுதி கண்ணுக்குத் தெரியும்படி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அத்துடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த , சிசிடிடி காமிராவின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச்சென்றனர்.
இந்த கொள்ளை தொடர்பாக டிஐஜி காமினி தலைமையில் எஸ்.பி விஜயகுமார் மற்றும் போலீசார் துரைமுருகன் வீட்டில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை, பணம் கிடைக்காத ஆத்திரத்தில் 100 ரூபாய் கூட வைக்க முடியாதா என கொள்ளையர்கள் சுவரில் லிப்ஸ்டிக்கால் எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.