டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிராக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பலனளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று சிறந்த மருத்துவ இதழான லான்செட்டின் தலைமை ஆசிரியர் டாக்டர் ரிச்சர்ட் ஹார்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சிகள் மிகவும் முரண்பாடாக இருக்கின்றன.
ஒவ்வொரு நாடும் தங்களது சொந்த ஆராய்ச்சியை மேற்கொள்கின்றன. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒருவித ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.
பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஒருங்கிணைப்புடன் இல்லாமல் அவர்கள் வழியில் நடந்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் குழப்பமான சூழ்நிலையாக இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்று நான் நம்புகிறேன். கொரோனா விவகாரத்தில் பல நாடுகளில் பலவிதமான நிகழ்தகவுகள் காணப்படுகின்றன.
இந்தியாவில் பிசிஜி தடுப்பூசி காரணமாக மக்களிடையே கொரோனா பாதிப்புகள் குறைவாக இருக்கிறது. பிரான்சில் கோவிட் 19ஐ தடுக்கும் வழிகள் ஆராயப்படுகின்றன. அந்நாட்டில் சிகரெட் பிடிப்பவர்களில் கொரோனா தொற்று குறைவாக உள்ளது. இதையடுத்து, நிகோடின் பற்றிய மருத்துவ ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
இந்தியா நிறைய தயாரித்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பற்றி குறிப்பிட்டு அவர் மேலும் சில கருத்துகளை முன் வைத்துள்ளார். கோவிட் 19க்கு எதிரான சாத்தியமான தீர்வு என்று முழு உலகமும் இதைக் கேட்கிறது. ஆனால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எந்தவொரு நன்மை பயக்கும் விளைவை கொண்டிருந்தது என்பதற்கு ஒரு சான்று கூட இல்லை என்றார்.
இந்தியாவில் ரேபிட் டெஸ்ட் கிட் பற்றி பேசிய அவர், இந்த சோதனைகளுக்கு அனைத்து நாடுகளிலும் கிடைக்காத அதிநவீன ஆய்வகங்கள் தேவைப்படுவதால் இந்தியாவில் இதன் பயன்பாடு பற்றி கொஞ்சம் குறைவான நம்பிக்கையே என்னிடம் இருக்கிறது என்று கூறினார்.