சியோல்
நாளை தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடர உள்ள நிலையில் வடகொரியா ராணுவ அணிவகுப்பு நிகழ்த்தியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பல காலமாக பகைமை நிலவி வருகிறது. வட கொரியா நடத்தி வரும் அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகள் இரு நாடுகளிடையே மேலும் பிளவை உண்டாக்கியது. நாளை தென் கொரியாவில் உள்ள பியாங்சங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது.
இந்த போட்டிகளில் வட கொரியா பங்கேற்க உள்ளது. இதற்காக 280 பேர் கொண்ட ஒரு குழு தென் கொரியாவுக்கு நேற்று காலை சென்றுள்ளது. இந்நிலையில் இன்று வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. ராணுவப் படைகள் உருவாக்கப் பட்ட தினத்தை ஒட்டி இந்த அளிவகுப்பு நடைபெற்றதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
சென்ற வருடம் வடகொரியா இந்த அணிவகுப்பை ஏப்ரல் மாதம் நடத்தியது. ஆனால் இப்போது பிப்ரவரியில் நடத்தி உள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு ராணுவ அணிவகுப்பு நேரடி ஓளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிப்பை பலவீனப்படுத்த வட கொரியா இவ்வாறு நடந்துக் கொள்வதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.