வடகொரியாவின் அணுஆயுத சோதனைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இனி அணுஆயுதங்கள், ஏவுகணைகள் சோதனை நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம்ஜாங் அறிவித்து உள்ளார்.
தென்கொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் வடகொரிய அதிபர் அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த வடகொரியாவின் அணுஆயுத சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக ஐ.நா. வ்டகொரியா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளது.
வடகொரியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி பரபரபப்பை ஏற்படுத்தி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின்மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று வடகொரியாவின் ஐ .நா.சபைக்கான துணை தூதர் மிரட்டி இருந்தார்.
இந்நிலையில் வடகொரியாவில் இனி அணு ஆயுதங்கள், ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வடகொரியா தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து, வடகொரியா, தென்கொரியா இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது, இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது என வடகொரியா உறுதி அளித்தது. மேலும் இதுகுறித்து அமெரிக்காவிடம் பேச தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து வரும் மே மாதத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என்றும், அணு ஆயுத சோதனை மையங்களை மூடவும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளது.
மேலும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.