North Korea vows to conduct WEEKLY missile tests – Trump praises China for helping on North Korea
வாரத்திற்கு ஒருமுறை ஏவுகணை சோதனையை நடத்தப்போவதாகவும், அதைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா ராணுவரீதியாக முயன்றால் கடுமையான பதிலடி கொடுப்போம் என்றும் வடகொரியா அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அதிர்ந்து போன அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியா விவகாரத்தில் சீனாவின் உதவியை தம் பக்கம் இழுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். அதற்கு முன்னோட்டமாக வடகொரியாவைக் கண்டிக்கும் வகையில் சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
5 முறை அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ள வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
வடகொரியாவை தடுத்து நிறுத்தி எச்சரிக்கும் விதத்தில், தனது கார்ல் வின்சன் கடற்படை அணியை அமெரிக்கா அங்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் காரணமாக அங்கு போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.கடந்த 2 தினங்களுக்கு முன் வடகொரியா மறுபடியும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இது தோல்வியில் முடிந்தபோதும், சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில் வடகொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹான் சாங் ரையோல் பி.பி.சி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘‘நாங்கள் இனி வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர அடிப்படையில் ஏவுகணை சோதனைகளை நடத்துவோம். அமெரிக்கா எங்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், அது முழு அளவிலான போராக மாறும்’’ என எச்சரித்தார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘அமெரிக்கா எங்கள் மீது ராணுவ நடவடிக்கைக்கு திட்டம் போட்டால், நாங்கள் எங்களுக்கே உரித்தான விதத்தில் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பதிலடி கொடுப்போம்’’ என்றும் எச்சரித்தார். வடகொரியா எங்களை சோதிக்க வேண்டாம் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறிய நிலையில், வடகொரியா இப்படி எச்சரித்திருப்பது பதற்றத்தை மேலும் தொடரச்செய்துள்ளது.
வடகொரியாவின் இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்பை சிறிது அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சீனாவை பாராட்டித் தள்ளியிருக்கும் அவரரது திடீர் மாற்றத்தில் இருந்து அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வடகொரியா விவகாரத்தில் சீனா தற்போது நடந்து கொள்ளும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது என்றும், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு ‘நைஸ் மேன்’ என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுமட்டுமின்றி, சீனா மீது கடுமையான பொருளாதாரத் தாக்குதல்களை நடத்த அமெரிக்க திட்டமிட்டு வருவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.