லக்னோ:

உ.பி. மாநிலம் கான்பூரில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னுடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. மாநிலம் கான்பூரில் வர்த்தகர்கள் மத்தியில் சில்லரைக் காசுகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. இந்த சில்லரை காசுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய அனுமதிக்கவில்லை.

இதனால் தொழிலாளர்களுக்கு சில்லரை காசுகளை சம்பளமாக வர்த்தகர்கள் கொடுக்கின்றனர். தொழிலாளர்களாலும் அதை பயன்படுத்த முடியவில்லை. இதை கண்டிக்கும் வகையில் வர்த்தகர்கள் சிலர் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்களின் ஒரு புறத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் படமும், மற்றொரு புறத்தில் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. உலகத்தை அழிக்காமல் ஓய மாட்டேன் என கிம் சொல்வது போன்றும், வியாபாரத்தை அழிக்காமல் விடமாட்டேன் என்று பிரதமர் மோடி கூறுவது போலவும் வாசகங்கள் ஹிந்தி மொழியில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக 22 வர்த்தகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரவின் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.