பியோங்யாங், வட கொரியா

ட கொரியாவுடனான பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என அமெரிக்காவை வட கொரியா கேட்டுக் கொண்டுள்ளது.

வடகொரியா மற்றும் அமெரிக்காவுடனான அமைதி பேச்சு வார்த்தை வியட்நாம் தலைநகர் ஹனோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. வட கொரிய அதிபர் பொருளாதார தடை நீக்கம் உள்ளிட்ட பல நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு தெரிவித்தார். இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் அதிருப்தி அடைந்தார். அந்த பேச்சு வார்த்தை இடையில் முறிந்தது

அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. மீண்டும் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதைப் பற்றி அமெரிக்கா இதுவரை ஒன்றும் சொல்லாமல் உள்ளது. அதே நேரத்தில் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என வட கொரியா விரும்பி வருகிறது. இது குறித்து வட கொரிய அரசு செய்தி தொடர்பாளர் கூறி உள்ளதாக ஒரு செய்தியை கொரிய மத்திய செய்தி ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “கடந்த வருடம் ஜூன் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவுடனான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அது இன்னும் செயல்பாட்டில் உள்ளது என நாங்கள் நம்பி வருகிறோம். ஆனால் அமெரிக்கா அது ஒரு சாதாரண காகிதம் என நினைத்து வருவதை அந்நாட்டின் சமீபத்திய நிலைப்பாடு தெரிவிக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் நாங்கள் ஒரு முறை கூட அந்த ஒப்பந்தத்தை மிறவில்லை.

ஆனால் அதை அமெரிக்கா கருத்தில் கொள்ளாமல் நடந்து வருகிறது. அமெரிக்கா  எங்களைப் பற்றி போட்டுள்ள தவறான கணக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். கடந்த ஏப்ரல் மாதத்தில் பேச்சு வார்த்தைக்கு தயார் என அதிபர் கிம் ஜாங் உன் சொல்லியும் அமெரிக்கா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பொறுமைக்கும் ஓரளவு தான் எல்லை உண்டு.” என தெரிவித்துள்ளது.